மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த
சில வேளைகளில் மவுஸ் மயக்க மருந்து சாப்பிட்டது போல என்ன செய்தாலும் நகராது. கர்சர் ஒரே இடத்தில் அப்படியே இருக்கும். வெகுநாட்கள் மவுஸைச் சுத்தம் செய்யாமல் விட்டாலோ அல்லது வேறு ஏதேனும் சிறிய பாகங்கள் மவுஸினுள் மோசமாகிப் போனாலோ அல்லது மவுஸ் சார்ந்த சாப்ட்வேரில் பிரச்னை ஏற்பட்டாலோ இந்த நிலை ஏற்படலாம். அப்போது மவுஸ் கர்சரின் நகர்த்தலை கீ போர்டு மூலம் மேற்கொள்ளலாம். இந்த கீ போர்டு மவுஸ் மூலம் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளலாம். கீ போர்டு மவுஸை இயக்கத்திற்குக் கொண்டு வரக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
முதலில் இந்த மாற்றங்களை மேற்கொள்ள அட்மினிஸ்ட்ரேட்டராக நீங்கள் கம்ப்யூட்டருக்குள் நுழைய வேண்டும். அதன்பின் கீ போர்டு மவுஸ் செட் செய்வதற்கு Alt+Shift+NumLock கீகளை ஒரு சேர அழுத்தவும். உடன் ஒரு சிறிய மவுஸ்கீஸ் என்ற பெட்டி கிடைக்கும். இதில் மவுஸ் கீகளை செயல்படுத்த ஓகே பட்டன் அழுத்தவும். கீகளை மவுஸ் கர்சர் இயக்கத்திலிருந்து விடுவிக்க கேன்சல் பட்டன் அழுத்த வேண்டும். செட் செய்வதற்கு செட்டிங்ஸ் பட்டன் அழுத்தவும். செட்டிங்ஸ் கட்டத்தின் மூலம் மவுஸ் கர்சரை இன்னும் கொஞ்சம் விரிவாக செட் செய்திடலாம். எடுத்துக் காட்டாக மவுஸ் கர்சரின் வேகம், துடிப்பு, இப்போது செட்டிங்ஸ் பார் மவுஸ் கீஸ் என்ற கட்டம் கிடைக்கும். இதில் தேவையான மாற்றங்களை மேற்கொண்ட பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது நம்லாக் கீ பேட் மூலம் மவுஸ் கர்சரை நகர்த்தலாம். 1,2,3,4,5,6,7,8,9 ஆகிய கீகள் மவுஸ் கர்சரை பல்வேறு திசைகளில் நகர்த்த உதவும். 5 என்ற கீ மவுஸ் இடது கிளிக் செயல்பாட்டிற்குப் பயன்படும். இன்ஸெர்ட் கீ மவுஸ் கர்சரை அழுத்திப் பிடிப்பதற்கான செயலை மேற்கொள்ளும். + கீ எந்த பொருளின் மீதும் டபுள் கிளிக்கிற்கு உதவிடும். டெலீட் பட்டனை அழுத்தினால் மவுஸ் அதன் இடத்திலிருந்து ரிலீஸ் ஆகும். நம் லாக் பட்டனில் கிளிக் செய்தால் கீ போர்டு மவுஸ் அமைப்பு விலகிடும்.
4.A. சிஸ்டம் டிப்ஸ்
திறந்திருக்கும் அனைத்து விண்டோக்களையும் மினிமைஸ் செய்திட மவுஸ் மூலம் ஒவ்வொன்றாக மினிமைஸ் செய்திடலாம். மொத்தமாக மினிமைஸ் செய்திட விண்டோஸ் கீ + எம் (Windows key+M) கீகளை அழுத்தவும். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களும் மினிமைஸ் செய்யப்படும். இவை அனைத்தையும் மீண்டும் பெற விண்டோஸ் கீ + ஷிப்ட் + எம் கீகளை (Windows key+Shift+M) அழுத்தவும். இந்த புரோகிராம்களை ஒவ்வொன்றாக மினிமைஸ் செய்திட Alt+Space+N கீகளை அழுத்தவும். இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக மீண்டும் மேக்ஸிமைஸ் செய்திட Alt+Space+X கீகளை அழுத்தவும்.
ஸ்குரோல் வீல் ட்ரிக்ஸ்
உங்கள் இன்டர்நெட் பிரவுசரில் நிறைய தளங்களைத் திறந்து வைத்து பார்த்து பார்த்து தகவல்களைப் படித்து காப்பி செய்து கொண்டிருக்கிறீர்கள். மவுஸின் ஸ்குரோல் வீலை சுழற்றினால் என்ன நடக்கிறது. பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தில் மேலும் கீழுமாகச் செல்வீர்கள். அப்போது ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு வீலைச் சுழற்றிப் பருங்கள்; சுழற்றும் திசைக்கேற்ப நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் தளங்கள் அடுத்தடுத்து காட்சி அளிக்கும்.
சரி அடுத்து ஒரு தளத்தில் பார்த்துக் கொண்டிருக்கையில் ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு வீலைச் சுழற்றிப் பாருங்கள். டெக்ஸ்ட் பெரிதாகும் அல்லது சிறியதாகும். இதனை அறியாத உங்களைச் சுற்றி இருக்கும் ஒரு சிலர் உங்களை ஆச்சரியத்துடனும் பார்க்கலாம்.
பக்கங்களை வேகமாக நகர்த்த
உங்களிடம் ஸ்குரோலிங் வீல் உள்ள மவுஸ் உள்ளதா? அப்படியானால் இந்த டிப்ஸை அவசியம் நீங்கள் படிக்க வேண்டும். டாகுமெண்ட்டில் ஒரு இடத்தில் உள்ள நீங்கள் 12 பக்கங்கள் முன்னரோ பின்னரோ உள்ள இடத்திற்குச் செல்ல விரும்புகிறீர்கள்.
என்ன செய்கிறீர்கள்? வேகமாக பக்கம் தாண்டிச் செல்லும் முயற்சிகளில் ஈடுபடுகிறீர்கள். சைட் பாரில் உள்ள கட்டத்தினை அழுத்தி இழுக்கப் பார்க்கிறீர்கள். என்ன ஆகிறது? நீங்கள் எதிர்பார்த்த இடத்திற்கும் முன்னாலோ பின்னாலோ டாகுமெண்ட் செல்கிறது.
இங்கே தான் மவுஸின் ஸ்குரோல் வீல் நமக்கு உதவுகிறது. ஏதேனும் ஒரு இடத்தில் மவுஸை வைத்து அதன் வீலை அழுத்திப் பிடிக்கவும். இதை அழுத்தியவுடன் இரு அம்புக் குறிகள் கொண்ட பெரிய கர்சர் ஒன்று தெரியும். இப்போது வீலை அழுத்தியவாறே மவுஸை முன்புறம் லேசாகத் தள்ளினால் அந்த திசையில் டெக்ஸ்ட் நகரத் தொடங்கும். எதிர்த்திசையில் லேசாக இழுத்தால் உடனே டெக்ஸ்ட் சுழல்வது நிற்கும்.
பின் மீண்டும் எதிர்புறமாக இழுத்தால் டெக்ஸ்ட் வேகமாக நகரத் தொடங்கும். எந்த இடத்தில் டெக்ஸ்ட் வேண்டுமோ அங்கு மவுஸின் வீலை விட்டுவிட்டால் டெக்ஸ்ட் செல்வது நின்றுவிடும். இந்த ட்ரிக் அனைத்து புரோகிராம்களிலும் வேலை செய்யாது என்றாலும் பல இமெயில் புரோகிராம்களிலும், வேர்டிலும் மற்றும் சில இணைய தளங்களிலும் செயல்படுகிறது.
பைல் பிரிவியூ: அவசரமாக ஒரு பைலை தேடுகிறீர்கள். அது வேர்ட் டாகுமெண்ட் அல்லது பிரசன்டேஷன் பைலாக இருக்கலாம். ஆனால் என்ன பெயரில் பைலை சேவ் செய்தோம் என்று நினைவில் இல்லை. நாளும் நினைவில் இல்லை. என்ன செய்யலாம்? விண்டோஸ் எக்ஸ்புளோரரில் டைரக்டரியைத் திறந்து வைத்து சந்தேகப்படும் பைல்கள் ஒவ்வொன்றையும் திறந்து மூடி பின் அடுத்த பைலை திறந்து மூடி செயல்களை மேற்கொள்ள முடியுமா? எவ்வளவு சுற்றும் வேலை இது.
பைல் அருகில் கர்சரைக் கொண்டு சென்றாலே அதன் உள்ளே இருக்கும் விஷயங்களை சிறு போட்டோ போல காட்டும் வசதி இருந்தால் எவ்வளவு நல்லது. இருக்கிறது அந்த வசதி. பைல் பிரிவியூ என்று இதனை அழைக்கின்றனர். அதனை செட் செய்திடும் வழியைப் பார்ப்போம். முதலில் File மெனு சென்று அதில் Open விண்டோவினைத் திறக்கவும். இந்த விண்டோ கிடைத்தவுடன் நீங்கள் அதில் காட்டப்படும் பைல்களின் பட்டியலைத்தானே பார்க்கிறீர்கள். இப்போது அந்த விண்டோவின் வலது பக்க ஓரத்தில் பாருங்கள். அதில் Views என்று ஒரு பட்டன் இருக்கும்.
இதில் கிளிக் செய்து திறந்தால் நிறைய ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதில் Preview என்பதில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவைப் பெறவும். இப்போது விண்டோ இரு பகுதியாகப் பிரிந்து காட்டப்படுவதனைப் பார்க்கலாம். ஒரு பக்கம் பைல் பட்டியலுடன் நீங்கள் தேர்ந்தெடுத்த பைலின் பெயர் தேர்ந்தெடுத்த நிலையில் இருக்கும். வலது பக்கம் உள்ள கட்டத்தில் அந்த பைலின் உள்ளே என்ன இருக்கிறது என்பது காட்டப் படும். இதன் முதல் பக்கம் தெரிந்தாலும் அருகே உள்ள அம்புக் குறியை அழுத்தி கீழே சென்று பைலில் உள்ளதைப் பார்க்கலாம்.
இதுதான் நீங்கள் தேடும் பைல் என்றால் உடனே அதனைக் கிளிக் செய்து திறந்து எடிட் செய்திடலாம்.இல்லை என்றால் கர்சரை பைல் பட் டியலில் அடுத்த பைலுக்கு எடுத்துச் செல்லுங்கள். அந்த பைலின் பிரிவியூ கிடைக்கும். இந்த தேடல் எளிதாகத் தெரி கிறதா? நேரம் மிச்சமாகிறதா! அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.
மவுஸ் மற்றும் மவுஸ் பேட் கொஞ்சம் கவனியுங்கள்
நாம் கம்ப்யூட்டர், கீ போர்ட் மற்றும் மவுஸ் கிளீன் செய்கிறோம். ஆனால் முக்கியமான மவுஸ் அமரும் மவுஸ் பேடினைச் சுத்தப்படுத்துவது இல்லை. பெரும்பாலும் மிகப் பழைய மவுஸ் பேடினையே பலரும் பயன்படுத்துகின்றனர். பழசாகிப் போனால் புதியது வாங்குவது இல்லை. கம்ப்யூட்டர், சிபியு, கீ போர்டு மற்றும் மவுஸ் ஆகியவற்றிற்கு கவர் போடுகிறோம். ஆனால் மவுஸ் பேடிற்கு போடுவதில்லை. அதனால் அதிக தூசி, ஆயில் சேர்ந்து மவுஸைக் கெடுக்கும் பேடாக மவுஸ் பேட் மாறுகிறது.
1. உங்கள் மவுஸ் பேட் எதனால் ஆனது என்று பார்க்கவும். துணி உள்ளாக இருந்து மேலாக பிளாஸ்டிக் அல்லது வேறு ஒரு துணியினால் மூடப்பட்டிருந்தால் சிறிய அளவில் ஷாம்பு மற்றும் ஈரத்துணி கொண்டு சுத்தப் படுத்தலாம்.
2. மவுஸ் பேடில் பிளாஸ்டிக் டாப் போடப்பட்டிருந்தால் ஏதேனும் கிளீனிங் லிக்விட் போட்டு சுத்தப்படுத்தலாம். டிஷ் சோப் மற்றும் ஷாம்பு இதற்கும் பயன்படுத்தலாம்.
3. எந்த வழியைப் பயன்படுத்தினாலும் சேர்ந்த அழுக்கு போகும் வரை சுத்தப்படுத்தவும். பயன்படுத்திய சோப், ஷாம்பு மற்றும் கிளீனிங் லிக்விட் மொத்தமாகப் போய்விட்டதை உறுதி செய்து கொள்ளவும். பின் உலர்ந்த டவல் ஒன்று எடுத்து அழுத்தி துடைக்கவும். இதில் ஏதேனும் நீர் உள்ளே சேர்ந்திருந்தால் வெளியேறி வர வேண்டும். அனைத்து நீரும் வெளியேறியதை உறுதி செய்தபின் மவுஸ் பேட் முற்றிலுமாக உலர்ந்த நிலையில் மீண்டும் பயன்படுத்தலாம். உங்கள் மேஜை மர மேஜையாக இருந்தால் ஒரு சொட்டு நீர் கூட இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
4. எதுவுமே செய்ய முடியாத நிலையில் அழுக்கேறிப் போய் வளைந்த நிலையில் அல்லது ஓரங்களில் மேல் கவர் பிரிந்து உள்ளே இருக்கும் துணி அல்லது பிளாஸ்டிக் உரிந்து போகும் நிலையில் இருந்தால் தயவு செய்து புதிய மவுஸ் பேட் ஒன்று வாங்கிப் பயன்படுத்தவும்.
5. மேலே கூறிய சுத்தப்படுத்தும் வழிகளை மேற்கொள்ளும் முன் உங்கள் மவுஸ் பேடின் கலர் நீர் பட்டு சாயம் போகிறதா என்று பார்த்துக் கொள்ளவும். அப்படிப் போகும் பட்சத்தில் தண்ணீர் விட்டுச் சுத்தப்படுத்தாமல் வேறு வழிகளைக் கையாள வேண்டும்.
சரி இந்த மவுஸ் பேட் உலரும் நேரத்தில் மவுஸ் பயன்படுத்தாமல் இருக்கிறோமே? என்ன செய்யலாம்? என்று யோசிக்கிறீர்களா? மவுஸைச் சுத்தப்படுத்துங்கள். உங்களுடைய மவுஸ் கீழாக பழைய பந்துருண்டை கொண்ட மவுஸ் என்றால் அதனைச் சுற்றி இருக்கும் வளையத்தை நேர் மாறாகச் சுழற்றினால் வளையம் விலக பந்து கைக்கு வரும். நிச்சயமாய் அந்த பந்துருண்டையில் கருப்பு தூசு அழுக்கு சேர்ந்திருக்கும். இதனை சிறிது தண்ணீர் அல்லது பிளாஸ்டிக் கெடுக்காத கிளீனர் கொண்டு நன்றாகச் சுத்தப்படுத்தவும். சுத்தப்படுத்திய பின்னர் அதனை உருளாத இடத்தில் வைத்து உலர வைக்கவும். அந்த நேரத்தில் உருண்டை இருந்த இடத்தை நோக்கினால் இரு சிறிய கம்பி ஒன்றுக்கொன்று மாறான திசையில் வைக்கப்பட்டிருக்கும். இதிலும் தூசு, தலைமுடி, நார் போன்றவை ஒட்டியிருக்கலாம். அதனை மெதுவாக முழுவதுமாக எடுத்துவிட்டு அந்த கம்பியைச் சாதாரண துணி கொண்டு சுத்தப்படுத்தவும். பின் உலர்ந்த பந்துருண்டையைப் போட்டு வளையத்தை மேலாக வைத்து மூடி மவுஸைப் பயன்படுத்த தொடங்கலாம். ஆனால் இப்போது மற்ற இடங்கள் சுத்தப்படுத்தப்பட்டதால் கிளிக் செய்திடும் இடம் உங்களுக்கு அசிங்கமாக அழுக்காக தோற்றமளிக்கும். இதனையும் சற்று ஈரத்துணி கொண்டு ஈரம் உள்ளே போகாமல் சுத்தப்படுத்தலாம். நன்றாக அனைத்தும் உணர்ந்த பின்னர் பயன்படுத்தலாம். இவை அனைத்தையும் செய்த பின்னர் நீங்கள் பயன்படுத்தும் மவுஸ் பேட் அல்லது மேஜை மேல்புறம் சுத்தமாக இருப்பதையும் உறுதி செய்து கொண்டு பயன்படுத்துங்கள். இல்லையேல் மவுஸை மட்டும் சுத்தம் செய்து புண்ணியம் இல்லீங்க.
நீங்கள் ஆப்டிகல் மவுஸ் பயன்படுத்துபவரா? அப்படியானால் உங்கள் மவுஸைத் முதலில் தலைகீழாகப் புரட்டிப் போடவும். இதன் கால்கள் போன்று நான்கு சிறிய பேட் நான்கு முனைகளிலும் இருக்கும். இதில் ஏதேனும் சிறிய துகள் ஒட்டியிருந்தால் எடுத்துவிடவும். மேலே கூறியது போல இந்த முனைகளையும் நன்கு சுத்தம் செய்து உலர விட்டுப் பின் பயன்படுத்தவும்.மவுஸ் நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மிக முக்கியமானது. மவுஸ் இயக்கம் சரியாக இயங்கவில்லை என்றால் கம்ப்யூட்டரை வேகமாக இயக்க முடியாது. எனவே அதனையும் அவ்வப்போது கண்டு கொள்வது நல்லது.
0 comments:
Post a Comment